‘ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு ஜனாதிபதி பெயர் தெரியவில்லை’ - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு ஜனாதிபதி பெயர் தெரியாதது போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமாகி இருக்கிறது.;

Update:2020-06-11 03:45 IST
அலகாபாத், 

உத்தரபிரதேசத்தில் 69 ஆயிரம் உதவி ஆசிரியர்கள் பணிக்கு சமீபத்தில் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஒட்டுமொத்த பணி நியமன தேர்வு முறையையும் ரத்து செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், இப்போது நடைபெற்று வரும் பணி தேர்வு முறையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.

இந்த தேர்வில் ஒவ்வொருவரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து பிரயாக்ராஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர். அவர்களில் ஒருவர் தர்மேந்திர படேல். இவர் உத்தரபிரதேச உதவி ஆசிரியர்கள் தேர்வுக்கான தேர்வில் 95 சதவீத மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இந்த வழக்கை விசாரித்த போலீசார் கூறுகையில், ’பொது அறிவு குறித்த அடிப்படை கேள்விகளுக்கே இவர்களிடம் பதில் இல்லை. இதன் மூலம் பணித்தேர்வு முறைகளில் முறைகேடு இருப்பது தெரிகிறது. இவர்களுக்கே ஒன்றும் தெரியவில்லை எனில் எப்படி மாணவர்களுக்கு இவர்களால் சொல்லிக்கொடுக்க முடியும்?, உதாரணமாக இந்தியாவின் ஜனாதிபதி பெயர் கூட இந்த தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு தெரியவில்லை‘ என்று கூறினர்.

இதனிடையே ஆசிரியர்கள் தேர்வு நியமன ஊழலை விசாரிக்க தனிப்படை அமைத்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.

இந்த ஊழல் விவகாரத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த கல்வி ஊழலுடன் இதை ஒப்பிட்டு கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை என்று வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்