இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற கோரும் மனு மீது உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு பிறப்பிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக மத்திய அரசை அணுகுமாறு மனுதாரருக்கு யோசனை தெரிவித்தது.;
புதுடெல்லி,
‘இந்தியா’ என்ற ஆங்கில பெயர் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துவதாகவும், நமது நாட்டு மக்கள் காலனி ஆதிக்க மனப்பான்மையில் இருந்து வெளிவருவதற்கும், நாட்டின் சுதந்திரத்துக்காக தீவிரமாக போராடியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், நமது நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் என்று கோரி நமஹா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு மீது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று காணொலி மூலம் விசாரணை நடத்தியது.
மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “இது தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது. அரசியல் சட்டத்தில் ஏற்கனவே நம் நாடு ‘பாரத்’ என்றுதான் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த மனு மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது“ என்று கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து, மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசை தாங்கள் அணுக அனுமதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் இது தொடர்பாக மத்திய அரசை அணுகலாம் என்றும், மனுதாரர் தனது கோரிக்கையை மனுவாக மத்திய அரசுக்கு தாக்கல் செய்தால் உரிய அமைச்சகம் அதன் மீது முடிவு எடுக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
இதே கோரிக்கையுடன் நிரஞ்சன் பட்வால் என்ற சமூக ஆர்வலர் தாக்கல் செய்த மனுவை கடந்த 2016ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.