ஊரடங்கு விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய டெல்லி பா.ஜ.க. தலைவரால் சர்ச்சை
அரியானாவில் ஊரடங்கு விதிகளை மீறி டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி கிரிக்கெட் விளையாடியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
சோனிபட்,
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் 31ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால், சரக்கு ரெயில்கள் தவிர்த்து பிற ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு ஸ்தலங்கள் மற்றும் கேளிக்கை பூங்கா உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு விசயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. லட்சக்கணக்கிலான புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் ஷேக்புரா நகரில் உள்ள கிரிக்கெட் அகாடெமியில் விளையாட்டு போட்டிகள் இன்று நடந்தன. இதில், பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. மற்றும் அக்கட்சியின் டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி கிரிக்கெட் விளையாடினார்.
ஊரடங்கு காலத்தில், சமூக இடைவெளி மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி அவர் செயல்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.