இரு வேறு விபத்துகளில் 14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் நடந்த இரு வேறு விபத்துகளில் 14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியானார்கள்
போபால்:
சுமார் 70 தொழிலாளர்களைக் ஏற்றிய லாரி ஒன்று மராட்டிய மாநிலத்தில் இருந்து உத்தரபிரதேசம் சென்று கொண்டிருந்தது. தொழிலாளர்களில் பெரும்பாலோர் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அதிகாலை 3 மணியளவில் லாரி மத்திய பிரதேசம் குணாவில் ஒரு பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் லாரியில் பயணம் செய்த தொழிலாளர்கள் 8 பேர் அதே இடத்தில் பலியானார்கள். படுகாயம் அடைந்த 54 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தொழிலாளர்கள் மும்பையில் இருந்து உத்தரபிரதேசத்தின் உன்னாவில் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். குணாவிலிருந்து அகமதாபாத்திற்கு பஸ் சென்று கொண்டிருந்தது. மூன்று பேருக்கு சிறு ஏற்பட்டு உள்ளன. அவர்களை உன்னாவோவுக்கு அனுப்ப நாங்கள் முயற்சி செய்கிறோம் என ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
மற்றொரு சோகமான சம்பவத்தில், புதன்கிழமை இரவு மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் ஒரு நெடுஞ்சாலையில் 6 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது உத்தரபிரதேச அரசு பேருந்து ஒன்று மோதி 6 பேரும் பலியானார்கள்.
சொந்த ஊருக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சமீபத்திய நாட்களில் நாடு முழுவதும் அதிகம் பதிவாகியுள்ளன. கடந்த வாரம், மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் ரெயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியதில் 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.