வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 14,800 இந்தியர்களை 64 விமானங்களில் இந்தியா கொண்டுவர திட்டம்
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 14,800 இந்தியர்களை வியாழக்கிழமை முதல் இந்தியா கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அறிவித்து உள்ளன. இதனால் தொழிற்சாலைகள்,நிறுவனங்கள் இயங்கவில்லை. கொரோனா வைரஸ் நெருக்கடியால் வெளிநாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
தற்போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் திருப்பி அனுபப்படுகின்றனர். அவர்கள் வியாழக்கிழமை முதல் விமானம் மற்றும் கப்பல்களில் கொண்டுவரப்படுவார்கள்
13 நாடுகளில் உள்ள 14,800 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் முதல் வாரத்தில் 64 விமானங்கள் மூலம் திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையின் மூன்று கப்பல்கள் மேற்கு ஆசியா மற்றும் மாலத்தீவில் உள்ள இந்தியர்களை அழைத்துவர செல்கிறது.
முதல் நாளில் 10 விமானம் மூலம் 2,300 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்படுவார்கள்.இந்தியாவில் இருந்து விமானங்கள் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்காள தேசம், அரபு எமிரேடு, இங்கிலாந்து, சவுதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஓமன், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்குச் செல்லும்.
2 ஆம் நாள், சுமார் 2,050 இந்தியர்கள் சென்னை, கொச்சி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு மற்றும் டெல்லிக்கு ஒன்பது வெவ்வேறு நாடுகளில் இருந்து வருவார்கள்.
அடுத்த நாள், மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ள 13 நாடுகளில் இருந்து இதேபோன்ற எண்ணிக்கையில் மும்பை, கொச்சி, லக்னோ மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் 4 வது நாளில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட எட்டு வெவ்வேறு நாடுகளில் இருந்து சிக்கித் தவிக்கும் 1,850 இந்தியர்கள் கொண்டுவரப்படுவார்கள்.
இயக்கப்படும் விமானத்தைப் பொறுத்து, ஒவ்வொரு விமானத்திலும் 200 முதல் 300 பயணிகள் சமூக தூரத்தை பராமரிப்புடன் அழைத்து வரப்படுவார்கள். சிறப்பு விமானங்களில் ஏறுவதற்கு முன்பு, பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், நீரிழிவு நோய் அல்லது ஏதேனும் சுவாச நோய் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும். அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் கூறி உள்ளது.
கடற்படையால் அனுப்பப்பட்ட மூன்று கப்பல்களில் ஐ.என்.எஸ் ஜலாஷ்வா அடங்கும், இதன் மூலம் சிக்கித் தவிக்கும் 1,000 இந்தியர்களை மீண்டும் கொண்டு வர முடியும். விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்ட ஜலாஷ்வா, இந்த பணிக்காக அரேபிய கடலுக்குள் நுழைந்துள்ளது.