சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊர் செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள்; மத்திய-மாநில அரசுகள் ஏற்பாடு
வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மத்திய-மாநில அரசுகள் இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்து உள்ளன.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதேபோல் வெளிமாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், மற்றும் சுற்றுலா சென்று இருந்தவர்களும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை.
வெளிமாநில தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தனி இடங்களில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்தன.
இந்தநிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டதால், வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும், உரிய நடைமுறைகளின்படி மாநில அரசுகள் அவர்களை பஸ்களில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கடந்த புதன்கிழமை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, வெளிமாநில தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும், பிற மாநிலங்களில் உள்ள தங்கள் மாநிலத்தவர்களை திரும்ப அழைக்கவும் பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளன. பஸ்களில் அனுப்பி வைப்பது சிரமம் என்பதால், சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று தெலுங்கானா, பஞ்சாப், பீகார், மராட்டியம், கேரளா உள்ளிட்ட சில மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
அதை ஏற்றுக் கொண்ட உள்துறை அமைச்சகம், வெளிமாநில தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோரை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரெயில்களை இயக்குமாறு ரெயில்வே அமைச்சகத்தை கேட்டுக் கொண்டது. அதன்பேரில் ரெயில்வே அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நேற்று முதல் சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுத்தது.
அதன்படி தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி-ஜார்கண்ட் மாநிலம் ஹாதியா, மத்தியபிரதேச மாநிலம் நாசிக்- உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, கேரள மாநிலம் ஆலுவா-ஒடிசா மாநிலம் புவனேசுவரம், நாசிக்-பீகார் மாநிலம் பாட்னா, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்- பாட்னா, கோட்டா-ஹாதியா இடையே தலா ஒரு ரெயில் வீதம் 6 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்தது. இந்த சிறப்பு ரெயில்கள் வழியில் எங்கும் நிற்காமல் செல்லும் என்றும், பயணிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் சிறப்பு ரெயில் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இயக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் தவித்து வந்த தொழிலாளர்கள் 1,200 பேர் நேற்று சிறப்பு ரெயில் மூலம் அவர்களுடைய சொந்த மாநிலமான ஜார்கண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஐதராபாத் அருகே உள்ள லிங்கம்பள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்டில் உள்ள ஹாதியா என்ற இடத்துக்கு நேற்று அதிகாலை 4.50 மணிக்கு அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.
அந்த சிறப்பு ரெயிலில் மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் 72 பேர் பயணம் செய்ய முடியும் என்றபோதிலும் கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 54 பேர் மட்டுமே அமர வைக்கப்பட்டு இருந்தனர்.
ரெயிலில் ஏறும் முன் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, முககவசம் வழங்கப்பட்டது. உண்ண உணவு, குடிநீர் ஆகியவையும் வழங்கப்பட்டன. அந்த ரெயில் வழியில் எந்த இடத்திலும் நிற்காமல் சென்றது.
இதேபோல் கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஆலுவா ரெயில் நிலையத்தில் இருந்து வெளிமாநில தொழிலாளர்களுடன் ஒரு சிறப்பு ரெயில் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்துக்கு புறப்பட்டு சென்றது.
இதனிடையே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு சிறப்பு ரெயில்களில் அனுப்பி வைப்பதற்கான செலவை அந்தந்த மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் (படுக்கை வசதி மற்றும் அதிவிரைவு சேவை சேர்த்து) உணவு மற்றும் குடிநீருக்கான தொகை மாநில அரசுகளிடம் இருந்து வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.