கொரோனா பாதிப்பில் இந்தியா முதல் வெற்றியை பெற்றுள்ளது-ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்

கொரோனா பாதிப்பில் இந்தியா முதல் வெற்றியை பெற்றுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-04-10 11:20 GMT
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது.  இவர்களில் 504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு 199 பேர் பலியாகி உள்ளனர்.  5,709 பேர்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 834ஆக அதிகரித்து உள்ளது. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்றுடன் ஊரடங்கு உத்தரவு 17 நாட்கள் நிறைவு பெறுகிறது.

இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியதன் மூலம், தொற்றைக் கணிசமாக குறைத்து, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முதல் வெற்றியை இந்தியா பெற்றுள்ளதாகச் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றால் நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் ஒரு வாரத்தில் எட்டு லட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்திருக்கும் என வெளியுறவு அமைச்சக செயலர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார பின்னடைவு, கோடிக்கணக்கான ஏழைகளின் வருமான இழப்பு ஆகியன ஏற்பட்டாலும், இந்த ஊரடங்கால் தொற்று விகிதம் பல மடங்கு குறைந்து விட்டதாக விகாஸ் ஸ்வரூப் தெரிவித்திருக்கிறார்.

சரியான சமயத்தில் ஊரடங்கை அறிவிக்காமலிருந்திருந்தால், இத்தாலியின் நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், 600 க்கும் அதிகமாக மாவட்டங்கள் உள்ள இந்தியாவில் 275 மாவட்டங்களில் மட்டுமே தொற்று பரவியுள்ளதால் அதைச் சமாளிப்பது இந்திய அரசுக்கு எளிதாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்