பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தகவல்
இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.
புதுடெல்லி,
அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் உருவாகி உள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெயை பொறுத்தவரை இந்தியா 84 சதவீதம் இறக்குமதியை நம்பியே உள்ளது. கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல், டீசல், இதர பெட்ரோலிய பொருட்கள் தயாரிக்கப்படுவதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் அவைகளின் விலையும் உயர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.
மூன்றில் இரண்டு பங்குக்கு மேலான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, ஈரான் பதற்றம் காரணமாக இந்தியாவில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதானிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை. எத்தகைய சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம். வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் முக்கிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் பேசியிருக்கிறார். கடந்த சில நாட்களாக உலக அரசியலில் நிலவும் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள இந்தியாவின் கவலையையும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மத்திய கிழக்கு நாடுகளின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோராக உள்ளது. எனவே அங்கு நடைபெற்றுவரும் சூழ்நிலைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பும், தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளித்துள்ளது.