இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக மாற்றுவதில் விவசாயத்திற்கு முக்கிய பங்கு உண்டு - பிரதமர் மோடி
இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக மாற்றுவதில் விவசாயத்திற்கு முக்கிய பங்கு உண்டு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தும்கூர்,
பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 107-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகை தந்துள்ளார்.
இன்று மதியம் 2 மணியளவில் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு சென்றார்.
சித்தகங்கா மடத்தில் உள்ள மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமியின் சமாதியில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, பின்னர் சித்தகங்கா மடத்தில் உள்ள மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து துமகூரில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 3-வது தவணையை வெளியிட்டார். தும்கூரு விவசாயிகளுக்கு கிருஷி கர்மன் விருதுகளையும் வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பேசியதாவது;-
“இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக மாற்றுவதில் விவசாயத்திற்கு முக்கிய பங்கு உண்டு. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கான நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக இணையதளம் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாய பொருட்களுக்கான பதப்படுத்தும் நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
கால்நடை வளர்ப்பில் ஏற்படும் செலவுகளை குறைக்க கால்நடைகளுக்கான நோய்த்தடுப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தொழிலை பொறுத்தவரை மீனவர்களுக்கான பொருளாதார உதவிகள் வழங்குவது, படகுகளை நவீனமயமாக்குவது மற்றும் மீன்பிடி தொழிலுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகிய மூன்று நிலைகளில் அரசாங்கம் செயல்படுகிறது.
இஸ்ரோ உதவியுடன் ஆழ்கடல் மீனவ படகுகள் நவீனமயமாக்கப்பட்டு அவற்றில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அவர் கூறினார்.