ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 5.15 சதவீதம் ஆக தொடரும்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.15 சதவீதம் ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

Update: 2019-12-05 08:09 GMT
புதுடெல்லி,

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று நிதி கொள்கை குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.15 சதவீதம் ஆக இருக்கும்.  இதேபோன்று ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதம் ஆகவும், வங்கி வட்டி விகிதம் 5.40 சதவீதம் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

2019-20ம் ஆண்டுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி 6.1 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைத்து நிதி கொள்கை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறும்பொழுது, 2019ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஏற்றுமதி குறைந்தது.  இது உலக வர்த்தகத்தில் தொடர்ச்சியான பலவீன நிலையை எதிரொலித்தது.

ஆனால் எண்ணெய் அல்லாத ஏற்றுமதி பொருட்களின் வளர்ச்சியானது 2 மாத இடைவெளிக்கு பின் கடந்த அக்டோபரில் சாதக நிலையை எட்டியது என கூறினார்.

இதற்கு முன் கடந்த அக்டோபரில் நடந்த கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் 5வது முறையாக குறைக்கப்பட்டது. 5  முறையும் சேர்த்து ரெப்போ வட்டி மொத்தமாக 1.35 சதவீதம் குறைக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்