ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திடம் இன்றும், நாளையும் அமலாக்கப்பிரிவு விசாரணை தனிக்கோர்ட்டு அனுமதி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்திடம் ஆவணங்களை காட்டி இன்றும், நாளையும் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவுக்கு தனிக்கோர்ட்டு அனுமதி வழங்கியது.;

Update:2019-11-22 05:15 IST
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், எம்.பி. ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில் சி.பி.ஐ, தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

பின்னர் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு

இருப்பினும், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதால் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து வருகிறார். அவருடைய நீதிமன்ற காவல் வருகிற 27-ந் தேதியுடன் முடிவடைகிறது.

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்து டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு வருகிற 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

2 நாள் விசாரிக்க அனுமதி

இந்த நிலையில், இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் சில ஆவணங்களை காட்டி ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று, சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய் குமார் குஹரிடம் அமலாக்கப்பிரிவு சார்பில் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ப.சிதம்பரத்திடம் திகார் சிறையில் இன்றும், நாளையும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

தனிக்கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று காலை திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்