2017ம் ஆண்டில் சைபர் குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன
2017ம் ஆண்டில் சைபர் குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன என தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை கூறுகிறது.;
புதுடெல்லி,
2017ம் ஆண்டில் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
2017-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) படி 30,62,579 வழக்குகளும் மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டப்படி (எஸ்.எல்.எல்) 19,44,465 வழக்குகள் என மொத்தம் 50,07,044 குற்ற வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளன. இது 2016 ஆம் ஆண்டை விட 3.6 சதவீதம் அதிகரிப்பு. 2016 ஆம் ஆண்டு 48,31,515 வழக்குகள் பதிவாகி உள்ளது.
கொலை வழக்குகளின் எண்ணிக்கை 5.9 சதவீதம் குறைந்துள்ளதாக குற்ற ஆவண காப்பக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2017 ஆம் ஆண்டில் 28,653 கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2016 ல் 30,450 ஆக இருந்தது.
பொது இடங்களில் சிகரெட் பிடித்தல், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துதல் போன்ற சுற்றுச்சூழல் தொடர்பான மொத்த குற்ற வழக்குகளில் 49.2 சதவீத வழக்குகள் தமிழகத்தில் பதிவாகி இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் குறிப்பிட்டுள்ளது. 2-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் 10,122 வழக்குகளும், 3-வது இடத்தில் கேரள மாநிலத்தில் 6,780 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
அறியக்கூடிய குற்றங்களான கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக 2017ம் ஆண்டில் மட்டும் 50.07 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் அதிகபட்சமாக கேரளா மாநிலத்தில் 6.53 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்த இடங்களில் உத்தரபிரதேசம் (6 லட்சம் வழக்குகள்), மத்திய பிரதேசம் (4.67 லட்சம்), தமிழகம் (4.20 லட்சம்) உள்ளன.
இதில் கொலை வழக்குகள் மட்டும், 28,653 பதிவாகியுள்ளன. நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில் தான் அதிக கொலை வழக்குகள் (4,324) பதிவாகியுள்ளன. மேலும், 32,559 கற்பழிப்பு வழக்குகளில் மத்திய பிரதேசம் (5, 562) மற்றும் உத்தரபிரதேசத்தில் (4,246) முதலிரண்டு இடங்களில் உள்ளன.
சைபர் குற்றங்களை பொறுத்தவரையில் 2016ம் ஆண்டு பதிவான வழக்குகளை விட 2017ம் ஆண்டு இரண்டு மடங்கு வழக்குகள் அதிகரித்துள்ளன. 2017 ஆம் ஆண்டில் மொத்தம் 50,07,044 அறியக்கூடிய குற்றங்களில் சைபர் குற்றங்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக (0.43%) அல்லது 21,796 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்தியா 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் முறையே 9,622, 11,592 மற்றும் 12,317 சைபர் கிரைம் வழக்குகளை பதிவு செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கான தரவு இரண்டு வருட தாமதத்திற்குப் பிறகு வருகிறது. தொகுப்பிற்கான புள்ளிவிவரங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாநிலங்கள் குற்றம் சாட்டுகின்றன.
"2017 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட சைபர் குற்ற வழக்குகளில் 56.0% மோசடியின் நோக்கத்திற்காகவும் (21,796 வழக்குகளில் 12,213 வழக்குகள் மோசடி ), 1,460 வழக்குகள் 6.7% பாலியல் சுரண்டல் மற்றும் 1,002 வழக்குகள் 4.6% ( அவதூறு ஏற்படுத்துவதற்கு என) பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சைபர் குற்ற வழக்குகள் உத்தரபிரதேசத்தில் (2,639) முதலிடத்திலும், மராட்டியம் (2,380) இரண்டாமிடத்திலும், கர்நாடகா (1,101) மூன்றாம் இடத்திலும் உள்ளன. மெட்ரோ சிட்டிகளில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.