2 ஆயிரம் நோட்டுக்குப் பதிலாக புதியதாக ஆயிரம் ரூபாய் நோட்டா?
2 ஆயிரம் நோட்டுக்குப் பதிலாக புதியதாக ஆயிரம் ரூபாய் நோட்டு வரப்போவதாக தகவல்கள் உலா வருகின்றன.
புதுடெல்லி,
கடந்த 2016-ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் உயர்மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து ரூ.2,000 நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.
அண்மைக் காலமாக ரூ.2,000 நோட்டுகள் ஏ.டி.எம்.களில் சரிவர கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட உள்ளதாகவும், மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை உடனடியாக வங்கிகளில் மாற்றி கொள்ளும்படியும் இணையதளங்களில் பலவிதமான செய்திகள் பரவியது. ஆனால் அப்படி எந்த எண்ணமும் இல்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இதுவரை அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில் (2019-2020) இதுவரை ஒரு நோட்டு கூட அச்சிடப்படவில்லை. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகவும், ஊழலை தடுப்பதற்காகவும் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், 2 ஆயிரம் நோட்டுக்கு பதிலாக ஆயிரம் ரூபாய் நோட்டு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வரப்போகிறது என ஒரு தகவலும், 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் என மற்றொரு தகவலும் உலா வருகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.