பணமோசடி வழக்கு; முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலுக்கு அமலாக்க துறை சம்மன்
பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,
மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி மிர்ச்சி இக்பால். இவர் போதை பொருள் கடத்தல் மற்றும் பலரை மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்ற செயல்களில் இப்ராகிமுக்கு வலது கரம்போல் செயல்பட்டு வந்துள்ளார்.
இவரது பெயரில் வாங்கப்பட்ட நிலத்தில், சீஜே ஹவுஸ் என்ற பெயரில் பிரபுல் பட்டேலின் தனியார் நிறுவனம் கடந்த 2006-2007ம் ஆண்டில் கட்டிடம் ஒன்றை கட்டியுள்ளது.
பின்னர் இந்த கட்டிடத்தின் 3வது மற்றும் 4வது தளங்கள் மிர்ச்சியின் மனைவி ஹஜ்ரா இக்பால் பெயருக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதனிடையே கடந்த 2013ம் ஆண்டில் லண்டனில் மிர்ச்சி இறந்து விட்டார்.
இந்நிலையில், பணமோசடி, போதை பொருள் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டு வாங்கிய நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது என அமலாக்க துறை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை என பட்டேல் கூறி வருகிறார்.
சமீபத்தில் மிர்ச்சியின் இரு நெருங்கிய கூட்டாளிகளை அமலாக்க துறை கைது செய்தது. இந்த நிலையில், பிரபுல் பட்டேலை வருகிற 18ந்தேதி மும்பை அமலாக்க துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
அவரிடம், விமான போக்குவரத்து ஊழலில் தொடர்புடைய மற்றொரு பணமோசடி வழக்கில் முன்பே அமலாக்க துறை விசாரணை நடத்தியிருந்தது.