மெகபூபா முப்தியை சந்திக்க மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி

மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.,) தலைவர் மெகபூபா முப்தியை சந்திக்க அக்கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-06 13:46 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வழிவகை செய்யும் 370  சட்டப்பிரிவை ஆக., 5-ம் தேதி மத்திய அரசு நீக்கியது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரிவினைவாத இயக்க தலைவர்கள் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 

தற்போது காஷ்மீரில் நிலைமை சீரானதை அடுத்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்திக் கொள்ளப்பட்டது. கடந்த 2 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். 

காஷ்மீரில் வீட்டுச் சிறையில் இருக்கும் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்தனர். அந்த கட்சியின் ஹஸ்னைன் மசூதி மற்றும் அக்பர் லோன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர், பரூக் அப்துல்லா மற்றும் அவரது மனைவி மோலி இருவரையும், ஸ்ரீநகரில் உள்ள இல்லத்தில் சந்தித்தனர். அரசு அனுமதியுடன் இந்த சந்திப்பு நடைபெற்றது.  

இதனைத்தொடர்ந்து தற்போது, மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.,) தலைவர் மெகபூபா முப்தியை அக்கட்சியை சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் நாளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்