இந்திய விமானப்படை தளங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு சதி - உளவு அமைப்புகள் எச்சரிக்கை

இந்திய விமானப்படை தளங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு சதி செய்துள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Update: 2019-10-02 22:45 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி அதிரடியாக ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

இது காஷ்மீரை எளிய தாக்குதல் இலக்காக கருதி, பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்து இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் காஷ்மீரிலும், அதைச்சுற்றிலும் உள்ள விமானப்படை தளங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் சதி செய்துள்ளனர்.

8 முதல் 10 பயங்கரவாதிகள் வந்து தற்கொலை தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என மத்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இது தொடர்பாக 2-வது மிகப்பெரிய எச்சரிக்கையான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட், அமிர்தசரஸ் மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதே போன்று அவந்திப்பூர், ஜம்மு, ஹிண்டன், அவந்திப்பூர் ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களும் உச்சக்கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரவு, பகல் பாராது 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

2 தினங்களுக்கு முன்னர் ராணுவ தளபதி பிபின் ராவத், பாகிஸ்தானில் பாலக்கோட்டில் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படையினால் அதிரடி தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்ட பாலக்கோட் பயங்கரவாதிகள் முகாம் இந்தியாவினுள் பயங்கரவாதிகளை அனுப்பி நாசவேலைகளில் ஈடுபடச் செய்வதற்கு வசதியாக மறுபடியும் செயல்படத்தொடங்கி உள்ளது என எச்சரித்தநிலையில், இப்போது காஷ்மீர் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள விமானப்படை தளங்களை ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு சதிசெய்திருப்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்