மொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா
2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மொபைல் செயலி வழியாக நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
புதுடெல்லி,
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும், காகித கணக்கெடுப்பில் இருந்து டிஜிட்டல் கணக்கெடுப்புக்கு மாறும் முறையாக இது அமையும்.
அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே விதமான அடையாள ஆவணமோ அல்லது அட்டையோ தேவை. கணக்கெடுப்பு துவங்கிய 140 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக மொபைல் செயலி மூலமாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட உள்ளது. வீடுவீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த செல்போன் வாயிலாக கணக்கெடுப்பை நடத்த ஊக்குவிக்கப்படுவார்கள்” என்றார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம், இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. அடுத்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பனிப்பிரதேசங்களில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதமே கணக்கெடுப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.