டெல்லி சட்டசபையில் காகித உபயோகத்துக்கு ‘குட்பை’

டெல்லி சட்டசபையில் 3 மாதங்களில் காகித உபயோகத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-08-04 22:01 GMT
புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

அங்குள்ள சட்டசபையில் காகித உபயோகத்துக்கு இன்னும் 3 மாதங்களில் ‘குட்பை’ சொல்லி விட முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சட்டசபை சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் கூறும்போது, “எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளுக்கு எதிரே மேஜையில் எல்.சி.டி. கணினி மானிட்டர்கள் அமைக்கப்படும். சட்டசபை நிகழ்ச்சிகள் பற்றி அதைப் பார்த்து எம்.எல்.ஏ.க்கள் தெரிந்து கொள்ளலாம். கேள்விகளையும், பிற அவை நடவடிக்கைகளையும் கணினி மானிட்டர்களில் வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் இன்னும் 3 மாதங்களில் டெல்லி சட்டசபையில் காகிதத்துக்கு வேலை இல்லாமல் போய் விடும். இந்த திட்டத்தை நிறைவேற்ற டெல்லி மாநில அரசு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது” என குறிப்பிட்டார்.

சபை நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ள வசதியாக எம்.எல்.ஏ.க்களுக்கு டேப்லட் கணினிகளும் வழங்கப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டெல்லி சட்டசபையை காகித உபயோகம் இல்லாத சட்டசபையாக மாற்றுகிற திட்டத்துக்கு தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.) தொழில் நுட்ப உதவி வழங்குகிறது.

மேலும் செய்திகள்