காங்கிரஸ் எம்.பி.யான சஞ்சய் சிங் பா.ஜனதாவில் இணைந்தார்

தனது பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.பி.யான சஞ்சய் சிங், இன்று பா.ஜனதாவில் இணைந்தார்.;

Update:2019-07-31 23:10 IST
புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங், சமீபத்தில் காங்கிரசை விட்டு விலகினார். மேலும் தனது எம்.பி. பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் தனது மனைவி அமிதா சிங்குடன் சேர்ந்து டெல்லியில் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீது ஒட்டுமொத்த நாடும் நம்பிக்கை வைத்துள்ளது. அதைப்போல நானும் அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளேன்’ என்று தெரிவித்தார். சஞ்சய் சிங்கின் வருகை பா.ஜனதாவை மேலும் பலப்படுத்தும் என்று ஜே.பி.நட்டா கூறினார்.

உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரபல தலைவராக விளங்கி வரும் சஞ்சய் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியிலும் நன்கு பிரபலம் வாய்ந்தவர் ஆவார். ஏற்கனவே இவர் பா.ஜனதாவில் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்