அசாமில் தொடர் மழையால் வெள்ளம்: 17 மாவட்டங்களில் 1556-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு
அசாமில் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்து 17 மாவட்டங்களில் 1556-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு அடைந்துள்ளது.
கவுகாத்தி,
அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் 17 மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் சூழ்ந்ததால் 4 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி, சிரங்க், திபுருகார் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 1556-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பை சந்தித்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலரது வீடுகள் இடிந்துள்ளன. 13 ஆயிரத்து 268 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் 2 நாட்களில் அபாய எல்லையை எட்டும் என தெரிகிறது.
பல இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இன்னும் மழை தொடர்ந்தால் பாதிப்பு அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.