லஞ்ச–ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு, யோகி அரசு அதிரடி
உ.பி.யில் லஞ்ச–ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேரை கட்டாய பணி ஓய்வில் அனுப்பி யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.;
உ.பி.யில் அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு சரியாக அலுவலகம் வரவேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சரியாக வரவில்லை என்றால் சம்பளம் ‘கட்’ செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரசின் பல்வேறு துறைகளில் லஞ்ச, ஊழல் தலைவிரித்தாடுவது மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. எனவே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசு முடிவு செய்தது. ஊழலில் ஈடுபடுவோர், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் யோகி ஆதித்யநாத் கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்நடவடிக்கையில் 600 பேர் சிக்கியுள்ளனர்.
லஞ்ச–ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 600 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் சுமார் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள சுமார் 400 பேர் மீது, பணியிடமாற்றம், ஊதிய உயர்வு–பதவி உயர்வு போன்றவை ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்த தண்டனையில் சிக்கிய அரசு ஊழியர்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் மீதான தண்டனையை மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைத்து உள்ளது. இதற்கிடையே பணியில் திறம்பட செயலாற்றாத மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய 50 வயதுக்கு மேற்பட்ட போலீசார் 50 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.