மராட்டிய மாநிலத்தில் அணை உடைந்து வெள்ளம் நேரிட்டதில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு
மராட்டிய மாநிலத்தில் அணை உடைந்து வெள்ளம் நேரிட்டதில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் தாமதமாக தொடங்கிய பருவமழை நகரை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல்கொட்டி தீர்த்து வருகிறது. நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்நிலையில், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை நேற்று நள்ளிரவு உடைந்தது. இதனால், அருகில் உள்ள கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. 12 வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.
அணை உடைப்பு தொடர்பான தகவல் தெரியவந்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியை தொடங்கினர். காலை 6 பேர் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 20க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 3 பேரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அணையில் மூன்று மாதங்களுக்கு முன்னதாக விரிசல் இருந்ததாக கிராம மக்கள் புகார் கூறியதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.