மங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையை விட்டு விலகி ஓடிய விமானம் - 183 பயணிகள் உயிர் தப்பினர்

மங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, விமானம் ஓடுபாதையை விட்டு விலகி ஓடியது. விமானியின் சாமர்த்தியத்தால் 183 பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2019-06-30 22:00 GMT
மங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் துபாயில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம் 183 பயணிகளுடன் மங்களூரு விமான நிலையத்திற்கு வந்தது.

அந்த விமானம் விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கிய போது, திடீரென ஓடுபாதையை விட்டு விலகி ஓட ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினர்.

உடனே விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக நிறுத்தினார். இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பின்னர் விமானத்தில் இருந்த 183 பயணிகளும் பத்திரமாக கீழே இறங்கினார்கள்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள், தொழில்நுட்ப குழு வல்லுனர்கள் விரைந்து வந்து அந்த விமானத்தை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி, இதேபோல் துபாயில் இருந்து வந்த விமானம் மங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, ஓடுபாதையை விட்டு விலகி ஓடி விமான நிலைய சுவரில் மோதி தீப்பிடித்ததில் 158 பயணிகள் உடல்கருகி பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்