பயன்கள் மகத்தானவை: வாழ்க்கையின் ஒரு அங்கமாக யோகாவை ஏற்றுக்கொள்ளுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்

யோகாவின் பயன்கள் மகத்தானவை. ஆகவே, வாழ்க்கையின் ஒருங்கிணைந்த அங்கமாக யோகாவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-06-05 23:30 GMT
புதுடெல்லி,

ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பல்வேறு நகரங்களில் யோகா பயிற்சிகள் நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டு, டெல்லி, சிம்லா, மைசூர், ஆமதாபாத், ராஞ்சி ஆகிய நகரங்களில் மத்திய அரசு சார்பில் யோகா பயிற்சி நடக்கிறது. ராஞ்சியில் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று தெரிகிறது.

இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், “ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினம் கொண்டாட உள்ளோம். யோகாவின் பயன்கள் மகத்தானவை. ஆகவே, யோகாவை உங்கள் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த அங்கமாக ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களையும் அப்படிச் செய்ய ஊக்குவியுங்கள்” என்று மோடி கூறியுள்ளார்.

மேலும், ‘திரிகோணாசனம்’ என்ற யோகா பயிற்சியையும் மோடி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், “நமது கிரகமான பூமியும், சுற்றுச்சூழலும் நாம் அனைவரும் பெரிதும் மகிழக்கூடியவை. எனவே, தூய்மையான கிரகத்தை பராமரிக்க இந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம். இயற்கையோடு இணைந்து வாழ்வது சிறப்பான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்