சாமியாராக வேண்டியவர், மத்திய மந்திரியான அதிசயம்: குடிசை வாழ்விடம், சைக்கிள்தான் வாகனம்

சாமியாராக வேண்டியவர், மத்திய மந்திரியாகி விட்டார். குடிசையில் வசித்து வந்த இவருக்கு வாகனம், சைக்கிள்தான்.

Update: 2019-05-31 22:38 GMT
புதுடெல்லி,

நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிற ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு தொகுதி, பாலசோர்.

இதே தொகுதியில் 2014 தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக களம் இறக்கப்பட்டு தோல்வியைத் தழுவிய பிரதாப் சந்திரசாரங்கி (வயது 64) இந்த முறையாவது வெற்றி பெற்று விட மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு உருவானது.

அவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் பிஜூ ஜனதாதளத்தின் ரவீந்திர குமார் ஜேனா, காங்கிரசின் நவஜோதி பட்நாயக். இருவரும் மிகப்பெரிய பின்புலம் உள்ளவர்கள். கோடீசுவர வேட்பாளர்கள். அதிலும் ரவீந்திர குமார் ஜேனா, கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று எம்.பி.யானவர்.

ஆனால் இந்த தேர்தலில் தொகுதியில் சைக்கிளில் வலம் வந்துதான் ஓட்டு வேட்டையாடினார், சாரங்கி. மக்கள் ஆதரவு அவருக்கு அமோகமாக இருந்தது. போட்டியும் பலமாக அமைந்தது.

ஆனாலும், தனக்கு அடுத்தபடியாக வந்த பிஜூ ஜனதாதளத்தின் ரவீந்திர குமார் ஜேனாவை சுமார் 13 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்திக்காட்டி சாரங்கி வெற்றி பெற்றார்.

ஏற்கனவே 2004, 2009 என 2 சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

இவர் மக்கள் பிரதிநிதி என்ற வார்த்தைக்கு இலக்கணமாக திகழ்கிறார். ஆன்மிகத்தில் ஊறித்திளைத்தவர். மிகச்சிறப்பான வழிகாட்டி, பேச்சாளர், சமூக சேவகர் என பெயர் பெற்றவர்.

சற்றும் எதிர்பாராத வகையில் இவரை தனது மந்திரிசபையில் சேர்த்து பிரதமர் நரேந்திர மோடி, அனைவரையும் வியப்பிலும், பாலசோர் தொகுதி மக்களை மகிழ்ச்சியிலும் ஒரு சேர ஆழ்த்தி இருக்கிறார். இது ஒரு அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

இவர், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், கால்நடை, பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகளுக்கு ராஜாங்க மந்திரி ஆக்கப்பட்டுள்ளார்.

ஒடிசாவில் பாலசோர் பகுதியில் உள்ள நிலகிரியில் பிறந்தவர். பி.ஏ. பட்டம் பெற்றவர். இளம் வயதிலேயே ராமகிருஷ்ணா மடத்துக்கு சென்று சாமியாராக விரும்பினார்.

பேளூர் ராமகிருஷ்ணா மடத்துக்கு பல முறை சென்றார். ஆனால் அங்கே இருந்தவர்கள், இவரது வாழ்க்கை குறிப்புகளை பார்த்து விட்டு திரும்ப அனுப்பி விட்டனர்.

விதவைத்தாயாரை கவனிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்ததை சாமியார்கள் சுட்டிக்காட்டித்தான் திரும்ப அனுப்பினர்.

அதன்பின்னர் அவர் திருமணமே செய்து கொள்ளாமல், சமூகப்பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டார். பழங்குடி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களை நிறுவி நடத்தி வந்தார். தனது எம்.எல்.ஏ. ஓய்வூதியத்தைக்கூட பழங்குடி குழந்தைகளுக்குத்தான் செலவு செய்து வந்தார். மிகச்சாதாரணமான ஒரு வாழ்க்கையைத்தான் இதுவரை வாழ்ந்து வருகிறார்.

குடிசையில் வசித்து வந்த இவருக்கு வாகனம், ஒரு பழைய சைக்கிள்தான். அங்கு வசித்து வருகிற பழங்குடி இன மக்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும், சாரங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்று தீர்வு காணாமல் ஓய மாட்டாராம்.

இப்போது அவர் மத்திய மந்திரியாகி இருப்பது, இதுவரை இருளில் வாழ்ந்து வந்த பழங்குடி இன மக்களின் வாழ்வில் புதிய விடியலை கொண்டு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்