மோடி மந்திரி சபையில் மீண்டும் வாய்ப்பு பெற்ற பெண் துறவி

உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பதேபூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.

Update: 2019-05-30 23:00 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் இணை மந்திரியாக பதவியேற்று இருப்பவர் சாத்வி நிரஞ்சன் ஜோதி (வயது 52). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பதேபூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று இருந்த இவருக்கு மோடியின் முந்தைய மந்திரி சபையில் உணவு பதப்படுத்துதல் துறைக்கான இணை மந்திரி பதவி அளிக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போதைய மந்திரி சபையிலும் தனது இடத்தை அவர் உறுதி செய்துள்ளார்.

காவி உடை அணிந்து பெண் துறவியாக வலம் வரும் சாத்வி நிரஞ்சன் ஜோதி காடு வளர்த்தல், சமூக-கலாசார மதிப்பீடுகளை பாதுகாத்தல், பசு பாதுகாப்பு, ஏழை குழந்தைகள் மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு திருமண உதவி செய்தல் போன்ற நலத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

இரு ஒருபுறம் இருக்க, மதரீதியான கருத்துகளை கூறி சர்ச்சைகளிலும் இவர் சிக்கியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் இவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்