ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா?
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க கடந்த 25-ந் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தனது குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனை கட்சியின் நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்கள் மகன்களுக்கு ‘சீட்’ கேட்டு தன்னை தொந்தரவு செய்ததாகவும் ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் மாநில அரசுகளும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த தகவலும் காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதற்கிடையே சில மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தொடங்கி உள்ளனர். பஞ்சாப் மாநில தலைவர் சுனில் ஜாகர், ஜார்கண்ட் அஜய்குமார், அசாம் ரிபுன் போரா, ராஜஸ்தான் அசோக் கெலாட், உத்தரபிரதேசம் ராஜ்பாப்பர், மராட்டியம் அசோக் சவாண் ஆகியோர் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் ராகுல் காந்தி தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு ராகுல் காந்தியை சந்திக்க காத்திருக்கின்றனர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ராகுல் காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்க தொடர்ந்து இரண்டு நாட்களாக டெல்லியில் தங்கி முயற்சித்து வருகிறார். ஆனால் ராகுல் காந்தி இன்னும் நேரம் ஒதுக்காமல் இருக்கிறார். தமிழக எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தூதுவர்களாக மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், கே.சி. வேணுகோபால் ஆகிய இருவர் மட்டும் நேற்று காலை ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள். அவர்கள் சமாதானத்தை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் இது குறித்து விவாதிக்க, இந்த வாரம் மீண்டும் காரிய குழு கூட்டத்தை கூட்டப்போவதாக் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதை காங்கிரஸ் மறுத்து உள்ளது.