எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அடுத்த அரசை அமைக்கும் - ராகுல் காந்தி பேட்டி

எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அடுத்த அரசை அமைக்கும் என்று ராகுல் காந்தி கூறினார்.

Update: 2019-05-17 23:15 GMT
புதுடெல்லி,

டெல்லியில் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, கட்சித்தலைவர் அமித்ஷா ஆகியோர் பேட்டி கொடுத்த அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

இந்த தேர்தலில் இந்திய மக்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை நான் முன்கூட்டியே கணித்து சொல்ல விரும்பவில்லை. மக்களின் மனநிலை மற்றும் பார்வை என்ன என்பது 23-ந்தேதி தெரிந்துவிடும்.

ஆனால் பா.ஜனதா தோல்வி அடையும். சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், தெலுங்குதேசம் போன்ற பல மாநில கட்சிகள் பா.ஜனதாவை நிச்சயம் ஆதரிக்காது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அடுத்த மத்திய அரசை உருவாக்கும்.

நரேந்திர மோடிக்கான 90 சதவீத கதவுகளை நாங்கள் மூடிவிட்டோம். எதிர்க்கட்சிகளை பழிதூற்றியதன் மூலம் 10 சதவீத கதவுகளை அவரே மூடிவிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி இப்போது நிருபர்களுக்கு நேரடியாக பேட்டி கொடுக்கிறார் என்று அறிகிறேன். ஆனால் ரபேல் விவகாரத்தில் என்னுடன் விவாதம் நடத்த தயாரா என்று கேட்ட எனது சவாலை ஏன் அவர் ஏற்க மறுக்கிறார்? அதையும் அவர் நிருபர்களிடம் தெரிவிக்க வேண்டும். மோடி மற்றும் அமித்ஷாவின் சித்தாந்தங்கள் மகாத்மா காந்தியின் சித்தாந்தங்கள் அல்ல.

2014-ம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சி சவாலை ஏற்றுக்கொண்டபோது நான் உண்மையாகவே அவரது செயல்பாடுகளை பார்ப்பதற்கு விரும்பினேன். ஆனால் அவர் மக்களின் உண்மையான பிரச்சினைகளை கவனிக்க மறந்துவிட்டார். இந்திய மக்கள் அவரை பேசுவதற்காக மட்டுமே பிரதமர் பதவியில் அமரவைக்கவில்லை என்பதை அவர் மறந்துவிட்டார்.

இந்த தேர்தலில் தேர்தல் கமி‌ஷனின் செயல்பாடு ஒருசார்பாகவே இருந்தது. பிரசாரங்களில் மோடி என்ன பேச விரும்புகிறாரோ அதை பேசினார். ஆனால் அதையே நாங்கள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தேர்தல் தேதிகள் அறிவிப்பே மோடியின் பிரசார பயணங்களை கருத்தில்கொண்டு வெளியிடப்பட்டதாக தெரிகிறது.

பா.ஜனதாவுக்கு இந்த தேர்தலில் அளவில்லாத பணமும், அதிகார பலமும் கிடைத்தது. பா.ஜனதாவுடன் ஒப்பிடும் அளவுக்கு காங்கிரசுக்கு பணமோ, பலமோ இல்லை. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சியின் அனைத்து தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

மேலும் செய்திகள்