கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்த நபரை ட்ரக்கில் இருந்து குதித்து உதவிய பிரியங்கா காந்தி!
உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் திடீரென மயங்கி விழுந்த நபரை காப்பாற்ற ட்ரக்கில் இருந்து பிரியங்கா காந்தி குதித்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாரணாசி,
உத்தர பிரதேச கிழக்கு பகுதிக்கான காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவர் தற்போது விறுவிறுப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக தற்போது வாரணாசியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அங்கு நேற்று மாலை நடைபெற்ற ஒரு பேரணியில் அவர் பங்கேற்று ட்ரக் ஒன்றில் இருந்த படியே பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததைப் பார்த்த அவர், உடனடியாக ட்ரக்கில் இருந்து குதித்து இறங்கினார். விரைந்து சென்ற பிரியங்கா காந்தி, நெஞ்சு வலிப்பதாகக் கூறிய அந்த நபருக்குத் தன் கையில் இருந்த தண்ணீரை கொடுத்து தக்க சமயத்தில் உதவினார்.
பின்னர் உடனடியாக அங்கிருந்த தனது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கார் ஒன்றை ஏற்பாடு செய்த அவர், அந்நபரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறிவிட்டு தனது பிரசார பயணத்தைக் தொடந்தார்.
இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி ஒருவரை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற பிரியங்கா காந்தி உதவினார் என்பது நினைவுகூரத்தக்கது.