பா.ஜனதா பிரமுகரை தாமதமாக விடுதலை செய்த மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்த பா.ஜனதா பிரமுகரை தாமதமாக விடுதலை செய்த மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

Update: 2019-05-15 12:34 GMT
புதுடெல்லி, 

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவை சேர்ந்த பிரியங்கா சர்மா, நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில் மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகாரின்பேரில், கடந்த 10–ந் தேதி அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். 

இதற்கிடையே ஜாமீன் கோரி, பிரியங்கா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை செய்யப்பட்டு, பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜெயிலில் இருந்து வெளிவந்தவுடன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர்.   ஆனால், பிரியங்கா சர்மா நேற்று விடுதலை செய்யப்படவில்லை. ஒரு நாள் தாமதமாக,  காலை 9.40 மணிக்குத்தான் சிறையில் இருந்து விடுதலை ஆனார். 

 பிரியங்கா சர்மாவின் வக்கீல் நீரஜ் கி‌ஷன் கவுல் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். பிரியங்கா சர்மாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மேற்கு வங்காள அரசு பின்பற்றவில்லை என குறிப்பிட்டார். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டு மேற்கு வங்காள மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.  "ஏன் உடனடியாக விடுவிக்கப்படவில்லை?" என்ற சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு, கோர்ட்டு உத்தரவு தொடர்பான நகல் மாலை 5 மணிக்குதான் கிடைத்தது என மேற்கு வங்க அரசு தெரிவித்தது. 

மேலும் செய்திகள்