மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் - பா.ஜனதா பிரமுகர்

மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என பா.ஜனதா பிரமுகர் பிரியங்கா சர்மா கூறியுள்ளார்.

Update: 2019-05-15 08:56 GMT

பா.ஜனதா இளைஞர் பிரிவு பெண் பிரமுகர் பிரியங்கா சர்மா, நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில் மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகாரின்பேரில், கடந்த 10–ந் தேதி அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். 

இதற்கிடையே, ஜாமீன் கோரி, பிரியங்கா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜெயிலில் இருந்து வெளிவந்தவுடன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர்.

‘‘கருத்து சுதந்திரம் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், மற்றொருவரின் உரிமையில் குறுக்கிடும்போது, உங்கள் கருத்து சுதந்திரம் நின்று விடும்’’ என்று நீதிபதிகள் கூறினர்.

இந்நிலையில் மார்பிங் செய்யப்பட்ட மம்தா புகைப்படத்திற்காக மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது என பிரியங்கா சர்மா கூறியுள்ளார். ஜாமீனில் வெளிவந்த பிரியங்கா  சர்மா பேசுகையில், "நான் வருத்தம் தெரிவிக்கப்போவது கிடையாது. நான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு எந்தஒரு தவறும் செய்யவில்லை. ஜெயிலில் மிகவும் அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டேன். என்னை ஒரு கிரிமினல் போன்று நடத்தினார்கள். ஜெயிலில் மிகவும் துன்புறுத்தப்பட்டேன்" எனக் கூறினார்.

மேலும் செய்திகள்