அமித் ஷா பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு: மம்தா சர்வாதிகாரியாக மாறிவிட்டதாக பா.ஜனதா தாக்கு

மேற்கு வங்காள மாநிலம் ஜாதவ்பூர் தொகுதியில் அமித் ஷா பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மம்தா பானர்ஜி சர்வாதிகாரியாக மாறிவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2019-05-13 22:15 GMT
புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநிலத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நாளான 19-ந் தேதி, 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. அவற்றில் ஜாதவ்பூர் உள்பட 3 தொகுதிகளில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற இருந்தது.

ஆனால், ஜாதவ்பூர் கூட்டத்துக்கு கடைசி நேரத்தில் மேற்கு வங்காள மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான அனுமதி வாபஸ் பெறப்பட்டது.

இந்த செயல், பா.ஜனதாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

இது ஒரு ஜனநாயக படுகொலை. தேர்தல் கமிஷன் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாவிட்டால், தேர்தல் நடத்துவதில் அர்த்தம் என்ன இருக்கிறது?

மம்தா பானர்ஜி, முழு சர்வாதிகாரி ஆகிவிட்டார். அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு பெருகி வருவதை கண்டு விரக்தியில் இருக்கிறார். அவரைத் தேர்ந்தெடுத்த மக்களே அவரை தோற்கடிக்க போகிறார்கள்.

மம்தா பானர்ஜி குறித்து கேலிச்சித்திரம் வரைந்ததற்காக பா.ஜனதா இளைஞரணி பிரமுகரை மேற்கு வங்காள போலீசார் கைது செய்துள்ளனர். அப்படியானால், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் அசிங்கமான பதிவுகளை வெளியிட்டதற்காக, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், பா.ஜனதா ஊடக பிரிவு தலைவர் அனில் பலுனி எம்.பி. கூறியதாவது:-

பா.ஜனதாவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஜனநாயக விரோத வழிமுறைகளை பின்பற்றுகிறது. இவற்றை எல்லாம் தேர்தல் கமிஷன் வெறுமனே வேடிக்கை பார்க்கிறது. இதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம். தேர்தல் கமிஷனிலும் புகார் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்