ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறத் தயாரா? மாயாவதிக்கு பிரதமர் மோடி கேள்வி

செயல்திறன் கொண்ட அரசுக்கே மக்கள் வாக்களித்து வருகிறார்கள், எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும் என்று பிரதமர் மோடி கணித்துள்ளார்.

Update: 2019-05-12 11:10 GMT


உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,  செயல்திறன் மிக்க, நேர்மையான அரசுக்குத்தான் மக்கள் ஓட்டு போட்டு வருகிறார்கள். எனவே, இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும். உ.பி.யில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி அமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் உத்தரபிரதேச முதல்–மந்திரியாக இருந்த மொத்த நாட்களை விட நான் அதிக நாட்கள் குஜராத் மாநில முதல்–மந்திரியாக இருந்துள்ளேன். ஆனால், என் மீது ஊழல் கறை படிந்தது கிடையாது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் பட்டியல் இன பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்காக மாயாவதி முதலைக்கண்ணீர் வடிக்கிறார். அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறத் தயாரா?அந்த மாநில காங்கிரஸ் அரசும், இந்த சம்பவத்தை மறைக்க நினைக்கிறது என்றார். 

2018-ல் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் அல்வாரில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் அரசை விமர்சனம் செய்தததுடன் மாயாவதிக்கும் கேள்வியை எழுப்பியுள்ளார் பிரதமர் மோடி. 

மேலும் செய்திகள்