பிரதமர் மோடியை நான் அறைவேன் என்று கூறவில்லை -மம்தா பானர்ஜி மீண்டும் விளக்கம்
பிரதமர் மோடியை நான் அறைவேன் என்று கூறவில்லை, ஜனநாயகத்தால் அறைவேன் என்று தான் கூறினேன் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மம்தா பானர்ஜி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரசை கொள்ளைக்கூட்டம் என பிரதமர் மோடி விமர்சனம் செய்ததை மம்தா பானர்ஜி எதிர்த்தார்.
செவ்வாய் கிழமை கூட்டம் ஒன்றில் பேசுகையில், “ஒவ்வொரு முறையும் மோடி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கொள்ளைக்கூட்டம் என விமர்சனம் செய்யும் போது எல்லாம் அவருக்கு ஜனநாயக ரீதியான அறையை கொடுக்க வேண்டும்” என பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மம்தா பானர்ஜி எல்லை மீறுகிறார் என கண்டனம் தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி என்னை அறைந்தாலும் அவருடைய ஆசிர்வாதமாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என பிரதமர் மோடி கூறினார். இதுதொடர்பான விமர்சனம் எல்லை தாண்டிய நிலையில் மம்தா விளக்கம் ஒன்றை கொடுத்தார் அதில் மோடியை கன்னத்தில் அறைவேன் என்று நான் பேசியதாக மோடி கூறியுள்ளார். அது, ஜனநாயக அறை. மொழியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். ஜனநாயக அறை என்றால், மக்கள் தங்கள் ஓட்டு மூலமாக தீர்ப்பு அளிப்பார்கள் என்று அர்த்தம் என கூறினார்.
இந்தநிலையில் பசிரிஹாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
பிரதமர் மோடியை நான் அறைவேன் என்று கூறவில்லை, ஜனநாயகத்தால் அறைவேன் என்று தான் கூறினேன். நான் ஏன் பிரதமரை அறையப்போகிறேன். அவரை அறைந்தால் எனது கை உடைந்து விடும். 56 அங்குலம் மார்பளவு கொண்ட பிரதமர் மோடியை நான் எவ்வாறு அறைய முடியும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.