தேர்தலில் போட்டியிடுவது பற்றி எனது மகனிடம் விவாதித்ததே கிடையாது; ஆம் ஆத்மி வேட்பாளர் பேட்டி

தேர்தலில் போட்டியிடுவது பற்றி எனது மகனிடம் விவாதித்ததே கிடையாது என ஆம் ஆத்மி வேட்பாளர் பேட்டியளித்து உள்ளார்.

Update: 2019-05-11 13:09 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுகிறது.  லோக்பால் மசோதாவை அமல்படுத்தக்கோரி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் உருவான அக்கட்சி, டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் போட்டியிட்டு, கடந்த 2013ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது.

அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார்.  இந்நிலையில், 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மேற்கு மக்களவை தொகுதி வேட்பாளராக பல்பீர் சிங் ஜாகர் நிறுத்தப்பட்டுள்ளார்.  அவரது மகன் உதய் ஜாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எனது தந்தை கட்சியில் சேர்ந்து 3 மாதங்கள் தான் ஆகிறது. அந்த தொகுதியில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு நானே சாட்சி என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளர் பல்பீர் சிங் ஜாகர் கூறும்பொழுது, இந்த குற்றச்சாட்டுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.  தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது பற்றி எனது மகனிடம் நான் விவாதித்ததே கிடையாது.  அவனிடம் அதிகம் பேசுவது இல்லை.

அவன் பிறந்ததில் இருந்து அவனது தாயின் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறான்.  கடந்த 2009ம் ஆண்டில் என்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டேன்.  அவள் என்னுடன் 6 முதல் 7 மாதங்கள் வரையே ஒன்றாக வசித்தாள்.  விவாகரத்துக்கு பின்னர் எனது மகனை வளர்க்கும் பொறுப்பு அவளிடமே வழங்கப்பட்டது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்