மோடி என்ன சாதி என கேட்பவர்களுக்கு நான் ஏழை சாதி என பிரதமர் மோடி பதில்
மோடி என்ன சாதி என கேட்பவர்களுக்கு நான் ஏழை சாதியை சேர்ந்தவன் என பிரதமர் மோடி பதிலளித்து உள்ளார். #PMModi
சோன்பத்ரா,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா நகரில் தேர்தலை முன்னிட்டு நடந்த பொது கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, 21 வருடங்களுக்கு முன் இதே நாளில் இந்தியா அணு ஆயுத சோதனையை வெற்றிகரமுடன் செய்தது. ஆபரேசன் சக்தியை செய்து முடித்து தங்களது கடின உழைப்பினால் நாட்டுக்கு புகழை கொண்டு வந்து சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு நான் தலைவணங்குகிறேன்.
இந்த வரலாற்று சம்பவம் கடந்த 1998ம் ஆண்டு நடந்தது. நாட்டின் பாதுகாப்பிற்கு என்ன செய்ய முடியுமோ அதனை ஒரு வலிமையான அரசியல் சக்தி நிரூபித்தது.
இந்த திறனை இந்தியா எப்பொழுதும் கொண்டிருந்தது. ஆனால் வாஜ்பாய்க்கு முன்பிருந்த அரசுக்கு இதுபோன்ற முடிவை எடுக்க தைரியமில்லை. உங்களது முக்கியத்துவம் தேச பாதுகாப்பு என்றால் மட்டுமே நீங்கள் இதனை சாதிக்க முடியும் என பேசினார்.
இதன்பின், அவர்கள் மோடியின் சாதி என்ன என கேட்க தொடங்கியுள்ளனர். மோடிக்கு ஒரே ஒரு சாதி உள்ளது. இந்த நாட்டின் அனைத்து ஏழை மக்கள் என்ன சாதியோ அதுவே எனது சாதி. நான் ஏழை சாதியை சேர்ந்தவன் என அவர்களுக்கு கூறி கொள்கிறேன் என்றும் பேசியுள்ளார்.