10வது மக்களவை தேர்தல்; கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைத்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி
10வது மக்களவை தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைத்தது.
இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டு 10வது மக்களவை தேர்தல் நடந்தது. மே 20ந்தேதி முதற்கட்ட வாக்கு பதிவுக்கு பின்னர், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டபொழுது படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்பின் ஜூனில் 12 மற்றும் 15 ஆகிய நாட்களில் தேர்தல் நடந்தது. ராஜீவ் படுகொலைக்கு முன் 211 தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட வாக்கு பதிவில் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் ராஜீவ் மறைவுக்கு பின் மீதமுள்ள தொகுதிகளில் நடந்த வாக்கு பதிவில் அதிக இடங்களை அக்கட்சி கைப்பற்றியது. இந்த தேர்தலில் 53 சதவீதம் என்ற மிக குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகின.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவித்த பி.வி. நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது. அக்கட்சி 244 தொகுதிகளையும், பா.ஜ.க. 120 தொகுதிகளையும், ஜனதா தளம் 69 தொகுதிகளையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 35 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படவில்லை. பஞ்சாப்பில் கடந்த 1992ம் ஆண்டில் தேர்தல் நடந்தது. இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி 5 ஆண்டுகள் நீடித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டவுடன், ஊடகங்கள் பலரை பிரதமர் பதவிக்கு வருவார் என குறிப்பிட்டன.
அவர்களில் முன்னாள் உள்துறை மற்றும் வெளியுறவு துறை மந்திரியான பி.வி. நரசிம்மராவ், மகாராஷ்டிர முதல் மந்திரி சரத் பவார், முன்னாள் மத்திய பிரதேச முதல் மந்திரி அர்ஜுன் சிங் மற்றும் முன்னாள் நிதி மற்றும் வெளியுறவு துறை மந்திரியாக இருந்த என்.டி. திவாரி ஆகியோர் இருந்தனர். முடிவில் பி.வி. நரசிம்மராவ் தலைமையில் அரசு அமைந்தது.
நேரு குடும்பம் தவிர்த்து, லால் பகதூர் சாஸ்திரிக்கு பின் 2வது முறையாக காங்கிரஸ் பிரதமரானவர் பி.வி. நரசிம்மராவ். மைனாரிட்டி அரசை தலைமையேற்று நடத்தி 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். இவரது ஆட்சியில் இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.