பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் : சரத்பவார் வெளியிட்ட பட்டியலில் ராகுல்காந்தி இல்லை
பிரதமராவதற்கு தகுதியான 3 தலைவர்கள் இவர்கள் தான் என சரத்பவார் வெளியிட்ட பட்டியலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பெயர் இல்லை. #RahulGandhi #SharadPawar #LokSabhaElections2019
மும்பை
இந்தியாவின் அடுத்த பிரதமராக தகுதியான நபர்கள் இவர்கள் தான் என காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சுட்டிக்காட்டிய 3 பேரில் ராகுல் காந்தி இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான சரத்பவார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
2019 நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என நான் நம்பவில்லை. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோரில் ஒருவர் இந்தியாவின் அடுத்த பிரதமராக வர தகுதி படைத்தவர்களாக உள்ளனர். இந்த 3 பேரும் மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த அனுபவம் உள்ளவர்கள், அவர்களின் நிர்வாகத்திறமை அவர்களுக்கு கைகொடுக்கும்.
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் சிலவற்றை தங்கள் அணிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் பவார் கூறினார்.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவார், அடுத்த பிரதமர் குறித்த பரிந்துரையில் ராகுல்காந்தியின் பெயரை கூறாதது ஆச்சரியம் அளித்துள்ளது.