4வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு நிறைவு

4வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு நிறைவடைந்து உள்ளது. #LokSabhaElections2019

Update: 2019-04-29 13:45 GMT
இந்திய நாடாளுமன்ற தேர்தல், பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில் இன்று 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் 4வது கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இன்று தேர்தலை சந்தித்துள்ள பீகாரின் 5, ஜார்கண்டின் 3, மத்திய பிரதேசத்தின் 6, மராட்டியத்தின் 17, ஒடிசாவின் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் தலா 13, மேற்கு வங்காளத்தின் 8, காஷ்மீரின் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 4வது கட்ட நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 பெரிய மாநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகரில் உள்ள 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இந்த 4வது கட்ட தேர்தலுக்காக தலைவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா (பா.ஜனதா), தேவேந்திர பட்னாவிஸ் (பா.ஜனதா), ராகுல் காந்தி (காங்கிரஸ்), பிரியங்கா (காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), மாயாவதி (பகுஜன் சமாஜ்), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), நவீன் பட்நாயக் (பிஜூஜனதாதளம்), உத்தவ் தாக்கரே (சிவசேனா) உள்ளிட்டவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு, ஆதரவு திரட்டினர். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.

இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.

காலை 9 மணி நிலவரப்படி பீகாரில் 10.76%, ஜம்மு-காஷ்மீரில் 0.61%, மத்திய பிரதேசத்தில் 11.11%, மகாராஷ்டிராவில் 5.87%, ஒடிசாவில் 8.34% வாக்குகள் பதிவாகி இருந்தன.

ராஜஸ்தான் - 11.20%, உத்தரபிரதேசம் - 9.01%, மேற்கு வங்கம் - 16.89%, ஜார்க்கண்ட் - 12% வாக்குகள் பதிவாகி உள்ளன.

11 மணி நிலவரப்படி, பீகார் 13.95%, ஜம்மு காஷ்மீர் 3.69%, மத்திய பிரதேசம் 18.65 %, மகாராஷ்டிரா 8.15 %, ஒடிசா 10%, ராஜஸ்தான் 15.08 %, உத்தரபிரதேசம் 17.69% மேற்கு  வங்காளம் 21.69%, ஜார்கண்ட் 20.87 %  ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

12 மணி நிலவரப்படி பீகார் 18.26%, ஜம்மு காஷ்மீர் 3.74%, மத்திய பிரதேசம்  27.09%, மகாராஷ்டிரா 17.21%, ஒடிசா 19.67% ராஜஸ்தான் 29.34%, உத்தரபிரதேசம் 21.18% மேற்கு  வங்காளம் 35.10%, ஜார்கண்ட்  29.21%  ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

2 மணி நிலவரப்படி, பீகார் 37.71%, ஜம்மு காஷ்மீர் 6.66%, மத்திய பிரதேசம் 43.44%, மகாராஷ்டிரா 29.93 %, ஒடிசா 35.79%, ராஜஸ்தான் 44.62%, உத்தரபிரதேசம் 34.42%,  மேற்கு வங்காளம் 52.37%, ஜார்கண்ட் 44.90%  ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

3 மணி நிலவரப்படி 4 வது கட்ட தேர்தலில் 9 மாநிலங்களில் 72 பாராளுமன்ற  தொகுதிகளில் 49.53 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

பீகார் 44.23%, ஜம்மு காஷ்மீர் 8.42%, மத்திய பிரதேசம் 55.22%, மகாராஷ்டிரா 41.15%, ஒடிசா 51.54%, ராஜஸ்தான் 54.16%, உத்தரபிரதேசம் 44.16%, மேற்கு  வங்காளம் 66.01%, ஜார்கண்ட் 56.37%  ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

5 மணி நிலவரப்படி, 4வது கட்ட தேர்தலில் 9 மாநிலங்களில் 72 பாராளுமன்ற  தொகுதிகளில் 50.6 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

பீகார் 44.33%, ஜம்மு மற்றும் காஷ்மீர் 9.37%, ஜார்கண்ட் 57.13%, மத்திய பிரதேசம் 57.77%, மகாராஷ்டிரா 42.52%, ஒடிசா 53.61%, ராஜஸ்தான் 54.75%, உத்தர பிரதேசம் 45.08%, மேற்கு வங்காளம் 66.46% வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த தேர்தலில் 6 மணி நிலவரப்படி, பீகார் 53.67%, ஜம்மு மற்றும் காஷ்மீர் 9.79%, ஜார்கண்ட் 63.40%, மத்திய பிரதேசம் 65.86%, மகாராஷ்டிரா 51.06%, ஒடிசா 64.05%, ராஜஸ்தான் 62.86%, உத்தர பிரதேசம் 53.12%, மேற்கு வங்காளம் 76.47% வாக்குகள் பதிவாகி உள்ளன.

மேலும் செய்திகள்