மேற்கு வங்காளத்தில் வாக்காளர்களுடனான மோதலில் மத்திய படைகள் துப்பாக்கி சூடு
மேற்கு வங்காளத்தில் வாக்காளர்களுடனான மோதலில் மத்திய படைகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலின் 4வது கட்ட வாக்கு பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 8 மக்களவை தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெறுகிறது. இதில் சில இடங்களில் வாக்கு பதிவு தொடங்கிய சில மணிநேரத்தில் வன்முறை ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, பிர்பும் தொகுதிக்கான தேர்தலில் நானூர், ராம்பூர்ஹாட், நல்ஹாட்டி மற்றும் சியூரி பகுதிகளில் எதிரெதிர் கட்சிகளின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
இந்த தொகுதியின் துப்ராஜ்பூர் பகுதியில், மொபைல் போன்களுடன் வாக்கு மையங்களுக்குள் நுழைந்த வாக்காளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வாக்காளர்களுக்கும், மத்திய படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் கும்பலை கலைக்க பாதுகாப்பு படையினர் வானை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது.
இதேபோன்று வர்தமான் கிழக்கு தொகுதியில் ஜெமுவா மற்றும் பராபனி பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதில் பா.ஜ.க. வேட்பாளர் மற்றும் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவின் வாகனம் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. சில மர்ம நபர்களின் அச்சுறுத்தலை தொடர்ந்து வாக்காளர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.