அமேதி நாடாளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தி வேட்பு மனு ஏற்கப்படுமா? இன்று தெரியும்

அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது இன்று (திங்கட்கிழமை) தெரிய வரும்.

Update: 2019-04-21 23:13 GMT
அமேதி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வழக்கம்போல இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் மே மாதம் 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக ராகுல் காந்தி வேட்பு மனுதாக்கல் செய்து விட்டார்.

அமேதி தொகுதியில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்றது. அப்போது ராகுல் காந்தி வேட்புமனுவோடு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மீது சுயேச்சை வேட்பாளர் துருவலால் மனோகர், அப்சல் வாரிஸ், சுரேஷ் சந்திரா, சுரேஷ் குமார் ஆகியோருடன் சென்று பிரச்சினை எழுப்பினார்.

குறிப்பாக அவர்கள் ராகுல் காந்தியின் பெயர், தேசியத்துவம் (இந்தியரா?), கல்வி ஆகிய 3 அம்சங்களில் பிரச்சினை எழுப்பினர்.

ராகுல் காந்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதில் பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என்று ராகுல் காந்தியின் வக்கீல் ராகுல் கவுசிக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து இந்த விவகாரத்தில் 22-ந் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு விசாரணை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ராம் மனோகர் மிஷ்ரா அறிவித்தார்.

மேலும் இந்தப் பிரச்சினையால் அமேதி தொகுதியில் போட்டியிடுகிற 36 வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனையையும் அவர் 22-ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தார்.

தள்ளிவைக்கப்பட்ட வேட்பு மனு பரிசீலனை இன்று நடக்கிறது. அப்போது அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது இன்று தெரிய வரும்.

ராகுல் காந்தியின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என சுயேச்சை வேட்பாளர் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து இருப்பதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி அமேதி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் யோகேந்திரா மிஷ்ரா கருத்து தெரிவிக்கையில், “விடுதலைப்போராட்ட காலத்திலேயே (இந்திரா) காந்தி குடும்ப வரலாறு குறித்து நாட்டின் ஒவ்வொருவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது இப்போது ராகுல் காந்தியின் தேசியம் பற்றிய கேள்வியை சிலர் எழுப்புவது, அவர்களின் குறுகிய மனப்பாங்கைத்தான் காட்டுகிறது” என குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அனில் சிங், அமேதி தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் ஸ்மிரிதி இரானியின் கல்வித்தகுதி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.

ஸ்மிரிதி இரானி முன்பு தான் பட்டதாரி என்று கூறியதும், தற்போது திடீரென 12-வது வகுப்பு தேர்ச்சி என்று கூறி இருப்பதும் நினைவுகூரத்தக்கது.

ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தியின் வேட்பு மனுவை ரேபரேலி தொகுதியில் ஏற்பதிலும் சிக்கல் எழுந்தது. சோனியா காந்தியின் இயற்பெயர் ஆன்டனியோ மைனோ என்றும் அவர் தனது வேட்பு மனுவில் இதை குறிப்பிடவில்லை என்றும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் சார்பில் பிரச்சினை எழுப்பப்பட்டது.

அதே போன்று, தினேஷ் பிரதாப் சிங் இன்னும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.சி. என்பதால் அவர் ராஜினாமா செய்யாமல் வேட்பு மனுதாக்கல் செய்ய முடியாது என காங்கிரஸ் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீண்ட விவாதத்துக்கு பின்னர் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி என இரு தரப்பில் எழுப்பப்பட்ட எதிர்ப்பையும் தேர்தல் அதிகாரி நேஹா சர்மா நிராகரித்தார். இதனால் அங்கு பிரச்சினை முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்