‘வாரணாசியில் போட்டியிடுமாறு ராகுல் கூறினால் மகிழ்ச்சி அடைவேன்’ - வயநாட்டில் பிரியங்கா பரபரப்பு பேட்டி

வாரணாசியில் நான் போட்டியிடுமாறு ராகுல் காந்தி கூறினால் மகிழ்ச்சி அடைவேன் என்று பிரியங்கா கூறினார்.

Update: 2019-04-21 23:03 GMT
கல்பேட்டா,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. அங்கு நேற்று மாலை பிரசாரம் ஓய்ந்தது.

ராகுல் காந்திக்கு ஆதரவாக அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று அவர், புலவாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட (வயநாடு தொகுதிக்குட்பட்ட) கல்பேட்டாவை சேர்ந்த துணை ராணுவ வீரர் வசந்த் குமார் வீட்டுக்கு சென்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் அனைவரும் நேசிக்கிற நாட்டை, நாம் அனைவரும் நம்பிக்கை வைத்துள்ள நாட்டை காப்பதற்குத்தான் இந்த தேர்தல் நடக்கிறது. நாம் அனைவரும் சமத்துவம் பெற்றுள்ளோம். நாம் அனைவரும் நம்மை, நமது மதத்தை, நமது உணவுமுறையை, நமது வாழ்க்கை முறையை வெளிப்படுத்த சுதந்திரம் இருக்கிறது.

இந்த தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய காரியத்துக்காக போராடுகிறோம். மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

திடீரென மக்களிடம் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மக்களின் உரிமைகளை காக்கிற அரசு அமைப்புகள் பலவீனப்படுத்தப்படுகின்றன. இது சாதாரணமான ஒரு தேர்தல் அல்ல என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

குறுகிய மனம் கொண்டவர்களால் விதிக்கப்படுகிற சட்ட திட்டங்களில் இருந்து இந்த தேசத்தைக் காக்க வேண்டும். விமர்சனத்தைக் கண்டு அஞ்சுகிற அரசு இங்கு உள்ளது. உங்கள் (மக்கள்) குரலை ஒலிக்கிறபோது, அதை ஒடுக்க அரசு விரும்புகிறது. எனவே நீங்கள் (மக்கள்) ஓட்டு போடுகிறபோது, இதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

“பிரதமர் மோடி போட்டியிடுகிற வாரணாசி தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா?” என பிரியங்காவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “நீங்கள் காணத்தான் போகிறீர்கள். நான் அங்கு போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) கூறினால், நான் போட்டியிடுவதில் மகிழ்ச்சி அடைவேன்” என பதில் அளித்தார்.

கடந்த மாதம் காங்கிரஸ் தொண்டர்களுடன் பிரியங்கா கலந்துரையாடியபோது, அவர் ரேபரேலியில் போட்டியிடுமாறு கூறினர். அப்போது பிரியங்கா, “ ஏன், வாரணாசியில் போட்டியிடக்கூடாதா?” என கேள்வி எழுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது நினைவு கூரத்தக்கது.

“திருடனின் மனைவியை பார்ப்பதுபோலத்தான் உங்களை இந்த நாடு பார்க்கிறது என மத்திய மந்திரி உமா பாரதி கூறி இருக்கிறாரே?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பிரியங்கா பதில் அளிக்கையில், “எனது பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா வரையில் குடும்பத்தினர் அனைவரையும் இப்படியும், அப்படியும்தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் (இதையெல்லாம் கண்டுகொள்ளாமல்) எங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்