உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சியினரை குறிவைக்க மோடியின் ஒரே ஆயுதம், வருமான வரி சோதனைதான் - காங்கிரஸ் சாடல்

உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சியினரை குறிவைக்க மோடியின் ஒரே ஆயுதம், வருமான வரிசோதனைதான் என காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.

Update: 2019-04-17 22:30 GMT
புதுடெல்லி,

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வீட்டில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பிரசாரம் முடிவுற்ற நிலையில் நடந்த இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் போன்றோரை வைத்துக்கொண்டு சோதனை நடத்தி களங்கம் எற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், “வருமான வரித்துறையினரைக்கொண்டு உள்நோக்கத்துடன் சோதனை நடத்தி, எதிர்க்கட்சி தலைவர்களை வேட்டையாடுவதுதான் மோடியின் ஒரே ஆயுதம். இந்த தேர்தலில் போட்டியிட பாரதீய ஜனதா கட்சிக்கு நான்கு கூட்டாளிகள். அவர்கள் பிரதமர் மோடி, கட்சி தலைவர் அமித் ஷா, அமலாக்கத்துறையினர், வருமான வரித்துறையினர் ஆவர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிற இந்திய நாட்டின் மக்கள் மே 23-ந் தேதியன்று (ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிற நாள்) தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என கூறி உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது எதிர்க்கட்சியினரை குறிவைத்து வருமான வரி சோதனைகள் நடத்தப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ஒரு கட்சியிடம் பணம் வெள்ளமென குவிந்திருக்கிறது என்றால் அந்த கட்சி பாரதீய ஜனதா கட்சிதான். எதிர்க்கட்சிகள் வறட்சியின் காலத்தை கடந்து செல்கின்றன. வறட்சியால் பாதிக்கப்படுகிறவர்களை குறிவைத்துத்தான் சோதனை நடத்துகிறார்கள். பணத்தை வெள்ளமென குவித்து வைத்திருப்பவர்களை விட்டு விடுகிறார்கள். இது தான் இந்திய ஜனநாயகத்துக்கும், இந்த அரசுக்கும் அழகு” என கூறினார்.

கபில் சிபல், டுவிட்டரில் ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பணம் பாரதீய ஜனதாவிடம் வெள்ளமென குவிந்து கிடக்கிறது. எதிர்க்கட்சிகள் வறண்டு கிடக்கின்றன. இருப்பினும் எதிர்க்கட்சியிடம் (கனிமொழி) சோதனை. பாரதீய ஜனதா கட்சி பணமின்றி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது என வருமான வரி அதிகாரிகள் நம்புகின்றனர் என யூகிக்கிறேன்” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்