“மத நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதை தடுக்க மாட்டோம்” - கேரளாவில் ராகுல் காந்தி பிரசாரம்

மக்கள் தங்களது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதை தடுக்க மாட்டோம் என்று கேரளாவில் ராகுல் காந்தி பேசினார்.

Update: 2019-04-16 23:15 GMT
பத்தனம்திட்டா,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே உள்ள பத்தனம்திட்டாவில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

எல்லா மக்களும் தங்களது மத நம்பிக்கைகளை, உணர்வுகளை வெளிப்படுத்துவதை அனுமதிப்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்தக்கூடிய இந்தியாவைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது. மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை உண்மையாக வெளிப்படுத்துவதை ஒருபோதும் தடுக்க மாட்டோம்.

இந்த பிரச்சினையை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். தென்னிந்தியா, மற்றவர்களது யோசனைகளை மதிக்கக்கூடியது. எனவேதான், 2-வது தொகுதியாக போட்டியிட கேரள மாநிலம் வயநாட்டை தேர்வு செய்தேன். இவ்வாறு அவர் பேசினார்.

கொல்லம் மாவட்டம் பத்தனாபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சால் இந்த நாடு ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தங்களைத் தவிர மற்றவர்களின் குரல்களை ஒடுக்கவே இந்த அமைப்புகள் விரும்புகின்றன. தங்களது சித்தாந்தம்தான், நாட்டை ஆள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், மக்கள்தான் ஆள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

எங்கள் சித்தாந்தங்களை நீங்கள் ஏற்காவிட்டால், உங்களை அழித்து விடுவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். காங்கிரஸ் இல்லா பாரதத்தை காண விரும்புவதாக பிரதமர் கூறுகிறார். அதற்கு என்ன அர்த்தம் என்றால், காங்கிரஸ் சித்தாந்தத்தை அழித்து விடுவோம் என்பதுதான்.

நீங்கள் நினைப்பது தவறு என்று உங்களை ஏற்க வைப்போம். உங்களை தேர்தலில் அடிப்போம். ஆனால், உங்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்த மாட்டோம்.

ஒவ்வொருவரது குரலும் மதிக்கப்பட வேண்டும் என்பதால்தான், நான் வயநாட்டில் போட்டியிடுகிறேன். அதில் நான் பெருமைப்படுகிறேன். இங்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததற்காக, கட்சி சார்பின்றி கேரள மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் எவ்வளவோ வாக்குறுதி அளித்தார். அதில் ஒன்றான ரூ.15 லட்சம் யாருக்காவது கிடைத்ததா?

அவர் ரபேல் ஒப்பந்தம் மூலம் அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார். மகாத்மா காந்தி கிராம வேலை உறுதியளிப்பு திட்டத்தில் லட்சக்கணக்கானோர் வேலை செய்து ரூ.30 ஆயிரம் கோடியை பெறுகிறார்கள். ஆனால், இங்கு ஒரே ஒருவர் அப்பணத்தை பெற்று விட்டார். இதுபோல், 15 பெரும் பணக்காரர்களுக்கு மோடி ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

மேலும் செய்திகள்