நாடாளுமன்ற 2-வது கட்ட தேர்தலில் பிரசாரம் ஓய்ந்தது: 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு

நாடாளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 96 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று ஓய்ந்தது. ஓட்டுப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2019-04-16 23:00 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே மாதம் 19-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்ட தேர்தல், கடந்த 11-ந்தேதி நடந்தது. இதில் 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா, அருணா சலபிரதேசம், சிக்கிம் மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. ஒடிசாவில் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

பொதுவாக முதல் கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தாலும், ஆந்திராவில் மட்டும் தொண்டர்களிடையேயான மோதல்களில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 97 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (18-ந்தேதி) இரண்டாவது கட்ட தேர்தல் நடக்க இருந்தது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் 39, புதுச்சேரியில் 1, கர்நாடகத்தில் 14, மராட்டியத்தில் 10, உத்தரபிரதேசத்தில் 8, அசாம், பீகார், ஒடிசாவில் தலா 5, சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 3, காஷ்மீரில் 2, மணிப்பூர், திரிபுராவில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 97 நாடாளுமன்ற தொகுதிகளில் நேற்று மாலை பிரசாரம் ஓய்ந்தது.

ஆனால் பிரசாரம் முடிந்த நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்க உள்ள 18 சட்டசபை தொகுதிகளிலும், ஒடிசா சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்டமாக 35 சட்டசபை தொகுதிகளிலும் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் கட்ட தேர்தலை சந்திக்கிற முக்கிய தலைவர்கள் பட்டியலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா (தும்கூர்-மதசார்பற்ற ஜனதாதளம்), கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி (மண்டியா- மதசார்பற்ற ஜனதாதளம்), அதே தொகுதியில் நடிகை சுமலதா (சுயேச்சை), மத்திய மந்திரி சதானந்த கவுடா (பெங்களூரு வடக்கு- பாரதீய ஜனதா), மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் (நாந்தெட்-காங்கிரஸ்), முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டே மகள் பிரிதம் கோபிநாத் முண்டே (பீட்-பாரதீய ஜனதா) ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

நடிகை ஹேமமாலினி (மதுரா-பாரதீய ஜனதா கட்சி), நடிகர் ராஜ்பப்பர் (பதேப்பூர் சிக்ரி-காங்கிரஸ்), முன்னாள் மத்திய மந்திரி பரூக் அப்துல்லா (ஸ்ரீநகர்- தேசிய மாநாடு கட்சி) ஆகியோரும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

மொத்தம் 1,621 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இந்த இரண்டாவது கட்ட நாடாளுமன்ற தேர்தலில் நிர்ணயிக்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிற தொகுதிகளில் நேற்று இறுதிக்கட்ட பிரசாரம் முடிவுக்கு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஒடிசாவில் சம்பல்பூர் மற்றும் புவனேசுவரத்தில் பிரசாரம் செய்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியும் தேர்தல் கமிஷன் தடை காரணமாக நேற்று பிரசாரத்தில் ஈடுபட முடியாமல் போய்விட்டது.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. பொதுவாக 6 மணிக்கு முடிகிறது. சில இடங்களில் முடிகிற நேரம் மாறுபடுகிறது. தமிழ்நாட்டில் மதுரை தொகுதியில் சித்திரை திருவிழாவையொட்டி இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்.

96 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடக்கிற மாநிலங்கள் அனைத்திலும் மத்திய படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்