காங்கிரசுக்கு ஓட்டு போடுவது பாவச்செயல் - பிரதமர் மோடி பிரசாரம்
காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவது பாவச்செயல் என்று பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
அசாம் மாநிலம் மங்கள்டாய் பகுதியில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி, ‘புகழ்பெற்ற குடும்பத்துக்காக’ தேர்தலில் போட்டியிடுகிறது.
கழுத்தளவு ஊழலில் சிக்கி உள்ளது. ஊழலை வாழ்க்கை முறையாகவே ஆக்கி விட்டது. அதன் புகழ்பெற்ற குடும்பத்தினரே ஜாமீனில்தான் உள்ளனர். இப்போது, புதிய ஊழலில் சிக்கி இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் வசிக்கும் பகுதியில் சாக்கு மூட்டைகளில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
அந்த பணம், ஏழை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்க கொடுக்கப்பட்ட பணம்.
அதை கொள்ளையடித்ததன் மூலம், ஏழை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளின் வாயில் இருந்து உணவை திருடி இருக்கிறார்கள். இத்தகைய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது பாவச்செயல். காங்கிரஸ் கட்சி, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு இருக்கவேண்டும். ஆனால், ஊழலில் ஈடுபடுவதற்கே நேரம் சரியாக போய்விட்டது.
காங்கிரஸ் தேச பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறது. நாட்டை பலவீனப்படுத்தும் கொள்கைகளுடன் நாட்டை ஆள விரும்புகிறது. நீங்கள் அளிக்கும் ஓட்டுதான், நீங்கள் துணிச்சலான அரசை விரும்புகிறீர்களா? அல்லது பலவீனமான அரசை விரும்புகிறீர்களா? என்பதை தெரிவிக்கும். ஆகவே, பா.ஜனதா வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள் என்றார்.