முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 401 வேட்பாளர்கள் கோடீசுவரர்கள்; 213 பேர் மீது குற்ற வழக்குகள்
நாடாளுமன்றத்துக்கு நடக்கும் முதல்கட்ட தேர்தலில் 401 வேட்பாளர்கள் கோடீசுவரர்கள் என்று தெரியவந்துள்ளது.
கொல்கத்தா,
நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்டமாக வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் 1,279 வேட்பாளர்களில் 1,266 பேரின் வேட்புமனு ஆவணங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
1,266 பேரில் 401 வேட்பாளர்கள் ஒரு கோடி மற்றும் அதற்கு மேல் சொத்து உள்ளவர்கள். இவர்களில் 69 பேர் காங்கிரஸ், 65 பேர் பா.ஜனதா, 32 பேர் பகுஜன்சமாஜ், 25 பேர் தெலுங்குதேசம், 22 பேர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், 17 பேர் டி.ஆர்.எஸ். ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள். 23 வேட்பாளர்களுக்கு சொத்துகள் இல்லை. 33 வேட்பாளர்கள் ஆண்டு மொத்த வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் தெரிவித்துள்ளனர். ரூ.1 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்களில் 70 பேர் தங்கள் வருமான வரி கணக்கை காட்டவில்லை.
213 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. 146 பேர் மீது தீவிர குற்ற வழக்குகளும், 12 பேர் மீது தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளும், 10 பேர் மீது கொலை, 25 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும், 4 பேர் மீது கடத்தல் வழக்குகளும், 16 பேர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பெண்கள் தொடர்பான வழக்குகளும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.