தேர்தல் நடத்தை விதி மீறல் :ஆளுநர் கல்யாண் சிங்கிற்கு சிக்கல்

தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக ஆளுநர் கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

Update: 2019-04-05 02:20 GMT
புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநில கவர்னராக இருந்து வரும்  கல்யாண்சிங், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது,   பிரதமராக மீண்டும் மோடியே வர வேண்டும். அவரே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கருத்தை வெளியிட்டிருந்தார். ஆளுநர் பதவியில் இருக்கும் அவர், பாஜகவுக்கு ஆதரவாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளை கல்யாண் சிங் மீறியிருப்பதாக முடிவுக்கு வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தை பரிசீலித்த ஜனாதிபதி, தேர்தல் ஆணையத்தின் புகாரை ஏற்றுக் கொண்டதுடன் கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி அந்த புகார் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். 

ஜனாதிபதி மாளிகையின் செயலகம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, 1990-களில் இமாசலப் பிரதேச பிரதேச ஆளுநராக இருந்த குல்ஸார் அகமது, தேர்தலில் போட்டியிட்ட தமது மகனை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். இதற்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, தனது பதவியை குல்ஸார் அகமது ராஜினாமா செய்தார்.

மேலும் செய்திகள்