பிரதமர் பதவிக்கு நான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது - நிதின் கட்காரி
பிரதமர் பதவிக்கு நான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது என நிதின் கட்காரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகிவிட்டது. வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சில கட்சிகளும் மோதல் போக்கை கொண்டுள்ளது. தொடர் மோதலில் ஈடுபட்ட சிவசேனா, நிதின் கட்காரியை பிரதமராக அறிவித்தால் ஆதரவு என்றது. பின்னர் கூட்டணியில் இணைந்தது. இதற்கிடையே மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசும் கருத்துக்கள் பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதாக பார்க்கப்பட்டது.
நரேந்திர மோடியை குறிவைத்து பேசுவதாகவும், அவருக்கு பிரதமர் பதவி மீது ஆசை இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் நிதின் கட்காரி பேசுகையில், பிரதமர் பதவிக்கு நான் ஒருபோதும் ஆசைப்பட்டது இல்லை. அதற்கான போட்டியிலும் நான் கிடையாது. அந்த பதவிக்கு தகுதியானவர் நரேந்திர மோடி தான். இது போன்ற கேள்விகள் எப்படி எழுகின்றன என்பது எனக்கு தெரியவில்லை.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அப்போது மீண்டும் நரேந்திர மோடி தான் பிரதமராக பதவி ஏற்பார். மோடியின் திறமையான தலைமையில் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அவருடைய தலைமையின் கீழ் மந்திரியாக பணிபுரியவே நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.