வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாய இடைவேளை அளிக்க கேரள அரசு உத்தரவு

வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாய இடைவேளை அளிக்க வேண்டும் என்று கேரள மாநில தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-03-01 10:56 GMT
திருவனந்தபுரம்,

வெயிலில் வேலை செய்யும் கட்டிட தொழிலாளர்கள், உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் தொழிலாளர்கள், வெயில் கொடுமையால் ஏற்படும் மயக்கம், மற்றும் பல்வேறு தொல்லைகளில் இருந்து தப்பிக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கட்டாய இடைவெளை  அளிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின்,  மாநில தொழிலாளர் துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

1958-ம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் பிரிவு 23 (அ) அதிகாரங்களைப் பயன்படுத்தி, மாநிலத் தொழிலாளர் நலத்துறையின் சட்டப்படி. பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, கேரளாவில் பணி செய்யும் கூலி தொழிலாளர்கள்  மற்றும் கட்டிட பணியாளர்களின் வேலை நேரம் பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 30 வரை மாற்றி அமைக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.

அதற்கு தகுந்தாற்போல நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களின் வேலை நேரத்தை மாற்றிக்கொள்ளும்படியும், மதிய நேரம் 12 மணி முதல் 3 மணி வரை இடைவேளை விடும் வகையில், அவர்களது 8 மணிநேர வேலையை மாற்றி அமைக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதே நேரத்தில் இந்த உத்தரவு, கடல் மட்டத்திற்கு மேலே 3000 அடி உயரத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பொருந்தாது என்பதோடு, அவர்களுக்கு சூரியனின் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.

அரசின் இந்த ஆணையை, மாநிலத்தின்  அனைத்து மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கண்காணித்து, ஒழுங்குமுறைகளை நிறைவேற்றவும், அதுகுறித்து தொழிலாளர் துறைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்